“அல்லாஹ் பராஅத் இரவில் முதல் வானத்தில் இறங்கி அடியார்களுடைய பாவங்களை கலபு கோத்திரத்தாரின் ஆடுகளுக்கு இருக்கும் அடர்ந்த ரோமங்களின் அளவு மன்னிக்கிறான் என்று நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்கள். -திர்மிதீ
“ஷஃபானில் 15ஆம் இரவில் பகல் பொழுதில் நோன்பு வையுங்கள். இரவில் நின்று வணங்குங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அலி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.-இப்னுமாஜா.
ஐந்து இரவுகளில் கேட்கப்படும் பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை. ரஜப் மாதத்தின் முதலாம் இரவு,ஷஃபான் மாதத்தின் 15ஆம் இரவு, ஜும்ஆவின் இரவு,இருபெருநாட்களின் இரவு என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.-பைஹகீ.
ஷஅபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, பாவ மன்னிப்பு தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களை போக்குகின்றேன். என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: இப்னுமாஜா 1378)
அதிகமான நோன்பு நோற்ற மாதம்
நான் நபி(ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஷஃபான் மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதைப் போன்று ஏனைய மாதங்களில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லையே! என்று கேட்டேன். அதற்கவர்கள், அது ரஜபுக்கும், ரமழானுக்குமிடையில் வரும் மாதமாகும். இம்மாதம் பற்றி மக்கள் கவனயீனமாக இருக்கின்றார்கள். இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன. இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமலும் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள். (அபுதாவூத், நஸஈ, ஸஹீஹ் இப்னு ஹுஸைமா)