ஹரம் சரீப் நேரலை பிளே(PLAY) பொத்தானை அழுத்தவும்

வியாழன், 28 ஜூலை, 2011

ரமலானில் செய்ய வேண்டிய அமல்கள்

ரமலானில் செய்ய வேண்டிய சில முக்கிய அமல்கள் பின்வருமாறு:

1. தூய்மையான நோன்பு
                “இறை நம்பிக்கையுடன் நன்மையைக் கருதி ரமழானில் நோன்பு நோற்பவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.” (புகாரி, முஸ்லிம்)
வெறுமெனே உண்ணாமல், பருகாமல் இருப்பதன் மூலம் மட்டும் இந்ந நன்மையை ஒரு நோன்பாளி அடைந்து விட முடியாது. ஏனெனில் நபி(ஸல்) கூறினார்கள்.
                  “பொய் பேசுவதையும் அதன் அடிப்படையில் செயல்படுவதையும் ஒரு நோன்பாளி தவிர்த்துக் கொள்ளவில்லையெனில் அவர் பசித்திருப்பதிலும், தாகித்திருப்பதிலும் இறைவனக்கு எந்தத் தேவையுமில்லை.” (புகாரி)
“நோன்பு ஒரு கேடையமாகும். எனவே உங்களில் நோன்பிருப்பவர் தீய வார்த்தைகளை பேசக்கூடாது, பாவச்செயல்கள் செய்யக்கூடாது. முட்டாள்தனமாக நடக்கக்கூடாது. யாரேனும் அவரை திட்டினால் “நான் ஒரு நோன்பாளி’ என்பதை மட்டுமே பதிலாகக் கூறவேண்டும். (புகாரி, முஸ்லிம்).

2.இரவு நேரத் தொழுகை
              “இறை நம்பிக்கையுடன் நன்மையைக்கருதி ரமழானில் இரவு நேரத் தொழுகையை நிறைவேற்றுபவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்:” (புகாரி, முஸ்லிம்)
இரவு நேரத்தொழுகை ரமழானல்லாத காலங்களிலும் செய்யப்படும் வழிபாடாக இருந்தாலும் ரமழானில் அது அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

3. தருமம்
              “நபி (ஸல்) அவர்கள் காற்றைவிட வேகமாக ரமழானில் தருமம் செய்பவர்களாக இருந்துள்ளார்கள். மேலும் ரமழானில் நிறைவேற்றப்படும் தருமமே மேலான தருமம்” என்று கூறினார்கள். (திர்மிதி)

தருமத்தை பணமாகவோ அல்லது உணவாகவோ தரலாம். நோன்பாளிகளுக்கு இஃப்தார் உணவளிப்பதும் இதில் அடங்கும்.
                “நோன்பாளிகளுக்கு இஃப்தார் உணவளித்தால் நோன்பாளிகளுக்கு கிடைக்கும் நன்மையைப் போல உணவளிப்பவருக்கும் கிடைக்கும்’ என நபி(ஸல்) கூறியுள்ளார்கள் (அஹ்மத்).

4. குர்ஆன் ஓதுதல்
                    ரமழான் குர்ஆன் இறங்கிய மாதமாதலால் இதில் குர்ஆனை அதிகமாக ஓதுவதும் அதன் பொருளுணர்ந்து சிந்திப்பதும், செயல்படுத்துவதும் மிகவும் அவசியமானதாகும். ஒவ்வொரு ரமழானிலும் ஜிப்ரீல் (அலை) வந்து நபி (ஸல்) அவர்களிடம் குர்ஆனை படித்துக் காண்பிப்பார்கள். இது குர்ஆனுக்கும் ரமழானுக்குமுள்ள தொடர்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.


5.இஃதிகாஃப்
                நபி(ஸல்) ஒவ்வொரு ரமழானிலும் கடைசிப் பத்து நாட்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் (தங்கி வழிபடுதல்) செய்துள்ளார்கள்.
                  இந்த வழிபாடு ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவானதாகும். எனவே இருபாலாருமே இதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.

6. உம்ரா
                “ரமழானில் நிறைவேற்றப்படும் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகராகும்’ என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.(புகாரி, முஸ்லிம்).

7. லைலத்துல் கத்ரை அடைய முயற்சிப்பது
                லைலத்துல் கத்ரின் சிறப்பு மேலே கூறப்பட்டுள்ளது. அது பிந்திய பத்து இரவுகளில் ஒற்றைப்படையான இரவில் இருப்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே ரமழானின் பிந்திய 10 நாட்களில் அதிக வழிபாடுகள் செய்து அந்த பாக்கியத்தை அடைய முயற்சிக்க வேண்டும். இஃதிகாஃப் இருப்பது இதற்கு சிறந்த வழியாகும்.

8. பாவமன்னிப்புக் கோருதல்
                “நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கப்படும் துஆ நிராகரிக்கப்படமாட்டாது’ என நபி(ஸல்) கூறியுள்ளார்கள். மேலும் ஸஹர் நேரத்தில் பாவமன்னிப்புக் கோருதல் திருக்குர்ஆனிலும் ஹதீஸிலும் வலியுறுத்திக்கூறப்பட்டுள்ளது. (பார்க்க அல்குர்ஆன் 51:18).

எனவே இந்த நல்ல நேரங்களில் இஸ்திஃபார்களையும், துஆக்களையும் அதிகப்படுத்த வேண்டும். ஸஹர் நேரத்தில் டி.வி. சானல்களில் மூழ்கியிருப்பதை விட இதுவே மேலானது என்பதை சிந்திக்க வேண்டும்.